Monday, July 6, 2009

இவர்தான் திருமாலனார்

இவர்தாம் திருமாலனார்



நெருப்பாற்றல் சொற்களிலே தெறித்து வீழும்
நினைப்பாற்றல் தமிழ்ப்பற்றை மிகைத்துச் சூழும்
குறிப்பாற்றல் தொண்டுணர்வை வரித்தே ஆளும்
கூராற்றல் கொள்கைதனை விரித்து நீளும்
பொறுப்பாற்றல் இனவரம்பின் மொய்ம்பைச் சாலும்
புலனாற்றல் மெய்யறிவின் விளிம்பைக் கோலும்!
அருப்பாற்றல் தொகைவல்லார்! எங்கள் அன்பின்
அடலேற்றைத் தமிழ்ப்பேற்றை வாழ்த்தாய் நெஞ்சே!




சொல்லாற்றல் பொருள்விரிப்பில் தகைமை காணும்
சுவையாற்றல் நாவிரிப்பில் புலமை காணும்!
உள்ளாற்றல் தமிழன்பின் வளமை பேணும்
உணர்வாற்றல் மொழியினத்தின் இளமை ஈனும்!
நல்லாற்றல் தமிழ்ச்சமய நெறியைக் கூறும்
நயனாற்றல் மரபுரிமைச் செறிவை வீறும்!
கொல்லாற்றல் தமிழ்வேங்கை! எங்கள் அன்பின்
கோன்அவரை வான்அவரை வணஙாய் நெஞ்சே!



அன்பாற்றல் மனவெளியின் அகல மாகும்
அறிவாற்றல் மொழிநிலையின் ஆழ மாகும்!
இன்பாற்றல் இனமீட்பின் எல்லா யாகும்
ஈர்ப்பாற்றல் கலைப்பணியின் கொல்லை யாகும்!
நண்பாற்றல் தமிழுயிர்க்கே பால மாகும்
நள்ளாற்றல் தமிழ்நெறிக்கே மூல் மாகும்
பண்பாற்றல் மிக்கவரை எங்கள் அன்பின்
பாவலரை! காவலரை! போற்றாய் நெஞ்சே!



பாவாக்கம்: பாவிளங்கோ கோவி. மணிதாசனார்,
பாடாங் செராய், கடாரம்.

No comments: