Wednesday, July 28, 2010

தமிழ்ப் பைந்தேவி

தமிழ்ப் பைந்தேவி


முன்னிருந்த பாலி மொழியும்கீர் வாணமும்

துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு – முன்னரே

பண்டைக்கா லத்தே பரவைகொண்ட முன்னூழி

மண்டலத்தி லேபேர் வளநாட்டின் – மண்டுநீர்ப்

பேராற்(று) அருகில் பிறங்கு மணிமலையில்

சீராற்றும் செங்கோல் திறல்செங்கோன் – நேராற்றும்

பேரவையி லேநூல் பெருமக்கள் சூழ்ந்தேந்தப்

பாரரசு செய்ததமிழ்ப் பைந்தேவி

                                              தமிழ்விடுதூது



சுள்ளென்று எறிக்கும் சுடரோன்பால் தோன்றியுயிர்

உள்ளம் துலக்கி உலாவலின் – தெள்ளுபுகழ்ப்

பண்டைப் பெரியார்தாம் பைந்தமிழை ஒண்டமிழ்

ஒண்டமிழ் என்மனார் போந்து

                                                                                                                  பழம்பாடல்



ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்நேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்நேர் இலாத தமிழ்

                                                                                            தண்டியலங்கார உரைமேற்கோள்


பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து

இருப்பிலே இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை

நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோர் ஏன

மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றாள்

                                                                                                                               வில்லிபாரதம்


வரலாற்றுமுறை தெரியாதிருந்த காலத்தில்

தொன்ம(புராண)முறையில் தமிழைத் தற்காத்த

சமயநெறித் தமிழ்ப்பெருஞ்சான்றோர்



வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி; அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்று விடைபாகர்,

கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்!



இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர், இயல்வாய்ப்ப

இருமொழியும் வழிப்படுத்தார், முனிவேந்தர் இசைபரப்பும்

இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றால்,இவ்

இருமொழியும் நிகர்என்னும் இதற்குஐயம் உளதேயோ?

                                                                                                                                  காஞ்சிபுராணம்



மறைமுதல் கிளந்த வாயான்,

              மதிமுகிழ் முடித்த வேணி

இறைவர்தம் பெயரை நாட்டி;

              இலக்கணம் செய்யப் பெற்றே;

அறைகடல் வரைப்பில் பாடை

             அனைத்தும்வென்று; ஆரியத்தோ(டு)

உறழ்தரு தமிழ்த்தெய் வத்தை

             உள்நினைந்து ஏத்தல் செய்வாம்!

                                                                                                    சீகாளத்திப் புராணம்



வேலையில் வீழ்த்த கல்லு(ம்),

              மென்குடம் புகுத்த என்பும்,

சாலையில் கொளுவும் தீயும்,

              தரங்கநீர் வையை ஆறும்,

சோலைஆண் பனையும்,  வேதக்

              கதவமும் தொழும்பு கொண்ட

வாலையாம் தமிழ்ப்பூஞ் செல்வி ...

                                                                           குற்றாலத் தலபுராணம்



கண்ணுதல் பெருங்கட வுளுகழ கமோ(டு) அமர்ந்து;

பண்ணுறத் தெரிந்(து)ஆய்ந் த,இப் ப சுந்தமிழ், ஏனை

மண்ணிடை சிலஇலக் கண வ ரம்பிலா மொழிபோல்,

எண்ணிடை படக் கி டந்ததாய் எண்ணவும் படுமோ?



தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை

உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக்

கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித்

தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!



விடைஉ கைத்தவன் பாணினிக்(கு) இலக்கண(ம்) மேனாள்

வடமொ ழிக்(கு)உரைத்(து) ஆங்(கு);இயன் மலையமா முனிக்குத்

திடம்உ றுத்தி;அம் மொழிக்(கு)எதிர் ஆக்கிய தென்சொல்

மடமகட்(கு) அரங்(கு) என்பது வழுதிநா(டு) அன்றோ?
                                                                                       திருவிளையாடல் புராணம்



வரலாற்றுக் குறிப்பு:-

தமிழ்மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் மூன்றாம் தமிழ்ச்சங்கம் எனும் கடைசங்க காலத்திற்குப் பிறகு, மூவேந்தரும் தம் ஆட்சி ஆளுமை இழந்திருந்த 300 ஆண்டுகாலத்தில், களப்பிரர், பல்லவர் எனும் பிற இனத்து அரசர்கள் தமிழகத்தை வசப்படுத்தி ஆண்டுவந்தனர்.


இந்தக் காலக்கட்டத்தை ஆரிய வழியினர் மிகநன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் தமிழைத் துணிந்து மறைமுகமாகவும் நேரடியாகவும் சிறுமைகூறிய வேளைகளில், தமிழ்ப்புலவர்கள் எதிர்ப்புகாட்டி உள்ளனர். விதிவிலக்காக ஒருசில நன்றியுள்ள ஆரியப் புலவர்களும் தமிழுக்காகக் குரல்கொடுத்துள்ளனர். அதன்பிறகு, கடந்த 500 ஆண்டுகாலத்தில், தமிழ்வேந்தர் யாருமே இல்லாதுபோன நிலையில், தமிழ்ப்புலவர்கள் தம் படைப்புகளில்கூடத் தமிழைத் தற்காத்துக்கொள்ளும் படியாகத் தமிழ்ப்பெருமக்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புறுத்தி வந்துள்ளனர்.

இது வள்ளலார் காலம் வரையில் இவ்வாறு தொன்ம முறையில் தொடர்ந்து காணப்படுகிறது. இந்தத் தமிழ் ஆரியப் போராட்டம் கடந்த 18 நூற்றாண்டு காலமாகத் நீறுபூத்த நெருப்பாக இருந்துவருகிறது.


அறிவியல் முறையிலான ஆராய்ச்சிமுறைகள் வாய்க்கப்பெற்றுள்ள இக்காலத்திலும்கூட இப்போராட்டம் புதிய கலைமுறைப்படி மேலும் தொடர்ந்துகொண்டு வருகிறது. தவத்திரு மறைமலையடிகளார் தலைமையில் ஒரு மறுமலர்ச்சிநிலை தமிழுக்கு ஏற்பட்டுப் பாவாணர் வழியில் வளர்ந்து வருகிறது.


No comments: