Saturday, June 27, 2009

மாறாப் பூட்கை

மக்கள் என்போர் தத்தம் இயல்பாலும் சூழல்களாலும் செயல்களாலும் விருப்புவெறுப்புகளின் காரணமாக வேறுபடும் பல்வேறு மனநிலையினராய் உள்ளனர். அவர்கள் ஒரு நேரத்தில் காட்டும் ஊக்கம் மற்றொரு நேரத்தில் மாறக்கூடும் - மறையக்கூடும்.



ஆனால், மானவுணர்வுள்ளவர்கள் தாம் சொன்ன சொல்லின் வண்ணமே செயல்பட்டவாறு இருந்துவருவர். வளமையும் வறுமையும் அவர்களின் உள்ளுறுதியை மாற்றுவதில்லை - மறக்கடிப்பதுமில்லை. உலகியல் நிலைகளில் எவ்வகைக் கெடுதல்கள் வந்தாலும் அஞ்சிப் பின்வாங்காதவர்கள் அவர்களே ஆவர். கெட்டாலும் மேன்மக்கள் இத்தகைய பேர்களேயன்றிப் பிறரல்லர்.



தம் தாய்நாட்டைக் காப்பதற்காக அறத்தோடு நின்று தொடுக்கும் அறப்போரில், எத்தனையோ பேர்கள் இருப்பர். அவர்களிலும்கூட, படையை எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு ஏற்றவாறு தாங்கி நடத்துவது என்பது எல்லாராலும் இயலக்கூடியதன்று. அந்தப் பொறுப்பு எதையும் தாங்கவல்ல பெருவீரரையே சாரும்.



அதுபோல, குடிசெய்யும் பொறுப்பு அதைத் தாங்கும் நிலையில் உறுதி மாறாத உள்ளம் உடையவர்களையே சாருமென்றார் நம் பேராசான். தமிழினத்திற்கு அத்தகையோரை அவர் எதிபார்த்துள்ளார்; அவர்களுக்காகவே இந்த இனநலப் பட்டயத்தை எழுதிச்சென்றுள்ளார்.
அந்த மரபியல் நிலைப்பாட்டுப் பட்டயம் இதுதான்.



அமரகத்து வன்கண்ணர் போல, தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் ௧0௨௭



அதன்படி, தமிழைத் தற்காத்துப் பேணும் பொறுப்பாற்றும் எல்லோரையும் பணிந்து போற்றுகினறேநன். ஏனையோரும் வருகென வரவேற்கின்றேன்.


- இர. திருச்செல்வம், சொல் அறிவியல் 1 .

No comments: