இது பாகான் செராய் சிவானந்த பரமகம்சர் தியான மன்றத் தலைவர்
பிரம்மசிறீ ப.சுப்பையா அடிகளார் அவர்கள், ஆசிரியன் இர.
திருச்செல்வத்திடம் கேட்டுக்கொண்டபடி ஆராய்ந்து அளிக்கப்பெற்ற
சொல்லாய்வு விளக்கம்.
கேட்ட நாள்: 09-02-2000
முடித்த நாள்: 15-02-2000
நூலாசிரியர்: இரத்தினர் மகன் ஆசிரியன் திருச்செல்வம்
அகரமுதலி தரும் சொற்பொருள் விளக்கம்:
தத்துவம் :
1. அதிகாரம் 2. உண்மை
3. சுபாவம் 4. தத்துவத்திரயம்
5. பலம் 6. புத்தி
7. பூதியம்(பௌளதிகம்) 8. பூதம் ஐந்து
9. தன்மாத்திரை ஐந்து
10. கன்மேந்திரியம் ஐந்து
11. மனம், அகங்காரம், புத்தி, குணம், பிரகிருதி இவை ஐந்து.
12. பொருள்களின் குணம்
13. இயல்பான அமைப்பு
14. பரமான்மா 15. தேக பலம்
16. இந்திரிய பலம் 17. பிரமப்பொருள்
18. தத்துவநூல் 19. சத்துவம்
[மூலம்: ஆனந்த விகடன் அகராதி, ப. 1406]
தத்துவம்:
1. அதிகாரம் 2. உண்மைநிலை
3. சுபாவம் 4. தத்துவத்திரயம்
5. தேகபலம் 6. அறிவு
7. இயல்புகுணம் 8. இந்திரிய பலம்
[மூலம்: கழகத் தமிழ் அகராதி, ப. 513]
பொருள்நிலைப் பகுப்புமுறை 3
‘தத்’ எனும் ஒலிநிலையில் ஒரே சொல்போல் தெரியும்; ஆனால், அதன் கருத்து நிலையில் எடுத்து ஒப்பிடும்போது, அஃது ஒரே சொல் அன்று. மாறாக, மூன்று வெவ்வேறு கருத்துமூலங்களிலிருந்து பிறந்துள்ள மூவேறு தனித்தனிச் சொற்கள் என்னும் உண்மைவிளக்கம் கிடைக்கும்.
தத்துவம் 1: பேசுவோனின் இடநிலையைக் காட்டும் தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்றனுள் படர்க்கையில் ஒருமைநிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். தான் > தன் > தத் என்று தமிழிலிருந்து சமற்கிருத மொழியில் உருமறியுள்ளது. இது படர்க்கையொருமைச் சுட்டுப்பெயர்.
தத்துவம் 2: உள்பொருள் – மெய்பொருள். இருத்தல் ஆகிய உளதாம்நிலை குறிக்கின்ற கருத்துள்ள சொல். பொருந்துதல் வினைக்கருத்துவழி ‘துன்’ என்ற வேர்வடிவிலிருந்து கிளர்ந்துள்ளது. துல் > துன் > தன் என்று அவ்வேர்வடிவு திரிபு கொண்டுள்ளது.
[ துன்னுதல் = பொருந்துதல். துன்னுதல் > தன்னுதல் = பொருந்துதல், பொருந்தியிருத்தல். தன் > தற்று > தத்து என்று திரிபு பெற்றுள்ளது.]
தத்துவம் 3: பருமை வினைக்கருத்துள்ள தது(துது) > தத்து > தத்துவம் என்பதிலிருந்து வடிவுற்ற சொல். பருத்தல் வினைக்கருத்துவழி பெருகுதல், திரளுதல், நிரம்புதல் – நிரம்பியிருத்தல், நிறைதல், நிறைந்ததாதல், ... எனப் பொருள்விரிபு பெறும். திரட்சிக் கருத்திலிருந்து வலிமைக்கருத்தும், வல்லமைக் கருத்தும் கிளைத்து வந்துள்ளன.
[ ஒ.நோ.: அது > அதைத்தல், அதைப்பு, அதித்தல், அதிக்கம், அதிகம், அதிகரித்தல், அதிகரிப்பு, அதிகாரம், அதிகாரி,... அடுத்ததாக, அது > அத்து என்று விரிவுற்றுள்ளது. அதிலிருந்து அத்தன், முதலான சொற்கள் தோன்றியுள்ளன. அதே அடிப்படையிலான கருத்தமைப்பில்தான், ‘தது’ > ததைதல், ... என்றும் தது > தத்து என்றும் விரிவுற்றுள்ளது. ]
தத்துவம் 1 = அது எனும் பொருள்
‘அது’ என்னும் பொருளுள்ள ‘தான்’ என்ற சுட்டுதல் கருத்துடைய சொல் வழியாகத் தத்துவம் என்னும் சொல் சமற்கிருத நூலோரால் திரிபாக்க முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தத்துவம்(Tat-tvam) என்னும் சொல் “அது நீ” அல்லது “அது நீயே” எனப் பொருள்படும். அது தத் + த்வம் எனும் அமைப்புநிலை உடையது. அதன் வழியான மெய்யியல் தொடரியம்தான் “ தத்துவம் அஸி ” அதாவது “ அது நீ ஆகிறாய்” என்னும் மறைமுடிபு(வேதாந்த)ப் பொருண்மொழியின்கண் அமைந்திருப்பதாகும்.
ta = pronoun, base see tad. ta-tama, mfn.(superl.) that one (of many), Pan. V. 3, 93; just that, AitUp. Iii 12, 13.
tad = n. it, that, this, this world.
tad-tad = this and that.
eg. ‘yad-yat para-vasam karma tad-tad varjayet’ whatsoever action depends on another, that he should avoid.
tad-dina = that day.
tad-tva = the having of its qualities.
tad-vidya = the knowledge of that.
tad > tan
சமற்கிருதத்தில், ‘சத்’ என்னும் சொல் மெல்லினத்தில் தொடங்கும் சொற்களோடு சேரும்போது, ‘சன்’ என்று மாறுகிறது. இதே போல, ‘சித்’ > சின் என்று மாறியுள்ளது. இது சமற்கிருத ஒலிமரபு. [ காண்க: Cit > Cid > Cin. இதில் தமிழின் தொடர்பே இல்லை என்று சொல்வதானாலும்கூட, தத் > தன் என்னும் ஒலிமுறையை மறைக்க முடியாது. இது இருவழியிலிலும் நிகழும். ]
tan = in. comp. for tad.
1. tannamika = mfn. named thus.
2. tan-nasa m. = destruction of that.
3. tan-matra = a rudimentary or subtle element (5 in number, viz. sabda; sparsa; rupa; rasa; gandha; from which the 5 Maha-bhutas or grosser elements are produced, cf. RTL. p. 31 & 32).
‘tva – த்வ’ என்பது இயல்பு, தன்மை, குணம்.
‘tvam – த்வம்’ என்பது ‘நீ’ எனும் பொருளுடைய முன்னிலைச் சுட்டுச் சொல்.
இவ்விரண்டு சொல்லீறுகளுக்கும் இடையில் காணப்படுகின்ற அடிப்படையான பொருள்வேறுபாட்டினை முதலில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனை கொண்டபடியாக இனிக் கூறப்படும் விளக்கங்களைக் கவனிக்க வேண்டும்.
மேற்கண்ட விளக்கங்கள் சமற்கிருத ஆங்கில அகரமுதலியினின்றும் எடுக்கப்பெற்றவையாகும். இனித் தத்துவம் என்னும் சொல்லுக்குள்ள முதல்வகைப் பொருள்வரையறையை நோக்குவோம்.
தத் = அது, அந்த.
தத் + த்வம் = அதன் தன்மை, அதன் இயல்பு, குணம், அதன்கண் அடங்கியுள்ள தன்மை, அதனிடத்தே உள்ள சொந்தத்தன்மை, அதற்கேயுரிய இயல்புத்தன்மை.
‘த்வம்’ என்பது தன்மை, இயல்பு, குணம், பிற எதனோடும் கலப்பில்லாத தனித்தன்மை எனப் பொருள்படும் ஒரு சமற்கிருதச் சொற்பின்னொட்டு. [ இதைப் பற்றிய விரிவான விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் மேலைநாட்டுச் சமற்கிருதப் பேரறிஞர் மானியர் வில்லியம்சு அவர்கள் தொகுத்துள்ள சமற்கிருத ஆங்கில அகரமுதலியில் காண்க. ]
அடுத்து, ‘த்வ’ என்னும் சமற்கிருத வடிவம், தமிழில் ‘துவம்’ என்னும் வடிவில் தழுவப்பட்டுள்ளது. ‘தத்வ்’ என்பதைத் தத்துவம் என்று தமிழியல்புக்கு ஏற்பத் தமிழர் ஒலித்திரித்து எடுத்தாளுகின்றனர். மகத்துவம், சமத்துவம், பிரபுத்துவம் முதலான வடசொற்களில் இதன் பயில்வைக் காணலாம்.
தலைமைத்துவம் முதலானவை தமிழ்ச்சொல்லோடு சமற்கிருத ஈறினைப் புணர்த்தி உருவாக்கப்பட்ட இருமொழிகலப்பினால் உண்டாகியுள்ள இருபிறப்பிச் சொற்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
‘த்வ’ அல்லது ‘துவ’ என்னும் சமற்கிருதப் பின்னொட்டுக்கு வேர்மூலம் தமிழில் உள்ளது. கரு தமிழ்; உரு சமற்கிருதம். இதுபற்றி அறிய என் பகுத்தல் கருத்துவழி அமைந்துள்ள சொல் அறிவியல் 3 என்னும் நூலினுள் காண்க.
இதுவரையில், சமற்கிருத நூல்களில் பதிவாகிக் கிடக்கும் ஒரு பகுதி உண்மையை மட்டும் அறிந்தோம். இனி, மீந்துள்ள பகுதியான ஆதிமூலத்தைக் காண்போம்.
தான் – தன்
‘தான்’ என்பது அது, அவர், அவன், அவள் என்னும் நான்கு நிலைகளில் உயர்திணை, அஃறிணை என்றுள்ள இரு திணைக்கும் பொதுவான சுட்டுச்சொல் அல்லது சுட்டுப் பெயர். இந்தத் ‘தான்’ என்பதிலிருந்து உண்டானதே அது என்று பொருள்படுகின்ற சமற்கிருதத்தின் ‘தத்’ என்னும் சொல் என்பர் பாவாணர். அவர்தம் கருத்து முற்றிலும் ஏற்புடையது.
‘தான்’ என்பது முற்காலத்தில் படர்க்கையொருமைச் சுட்டுப்பெயராய் இருந்தது. பின்பு, தற்சுட்டு(தன்+சுட்டு)ப் பெயராயிற்று என்பது வடமொழி வரலாறு எனும் அவர்தம் நூலில் அவர் அளித்துள்ள ஆராய்ச்சி விளக்கமாகும்.
இக்கருத்தின் உண்மையை முதலில் ஆராய்வோம். அன்றாடப் பேச்சு வழக்கில், இந்தத் ‘தான்’ என்னும் சொல் இன்னமும் பசுமையாக உள்லது. மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உள்ள இடநிலையில் இருந்து பேசும்போது, நானும் இல்லை, நீயும் இல்லை அவர்தான் என்னும் பொருள்பட வரும் உரையாடலைக் கீழே கான்க.
உயர்திணையில்:
முதலாமவர்: என்னப்பா, நீதான் சொன்னாயாமே?
இரண்டாமவர் : இல்லை! நான் இல்லை! தான்தான்(தாந்தான்) சொன்னது. தன்னைக் கேளுங்கள், தான் சொல்வது.
இதன் பொருள்: தான்தான் சொன்னது = அவர்தான் சொன்னார். தன்னைக் கேளுங்கள் = அவரைக் கேளுங்கள். தான் சொல்வது = அவர் சொல்லுவார்.
அடுத்து, ஓர் இலக்கிய மேற்கோளைப் பார்ப்போம்.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்,
தான்நோக்கி மெல்ல நகும் குறள்: 1094
இதன் பொருள்: நான் நோக்குகையில் என்னை நோக்காமல், நோக்காத போது, என்னை அவள் நோக்கி மெல்லச் சிரிப்பாள். இக்குறளில் வந்துள்ள தான் என்னும் சொல் அவள் என்னும் பொருளில் இருப்பதைக் காண்க.
அஃறிணையில்:
நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி
என்று தருங்கொல் என்வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
- ஒளவையார்
இச்செய்யுளில் வந்துள்ள ‘தான்’ என்னும் சொல்லுக்கு, ‘அது’ என்ற அஃறிணைப் பொருள் வருவதைக் காண்க. எனவே, பாவாணர் கூறுகின்றபடி, ‘தான் - தன்’ என்னும் சொற்கள் படர்க்கை ஒருமை நிலையைச் சுட்டும் பாங்கினை ஐயமற உணர முடிகின்றது.
இந்தத் தான் என்பதே தன் என்றாகிச் சமற்கிருதத்துக்கு மூலமான பழந்தமிழிலிருந்து சென்றுள்ளது. தன் எனும் இந்தச் சொல் வருமொழிக்கு ஏற்ப, ‘தத்’, ‘த்ச்’, ‘தஜ்’ என்று பலவாறாகச் சமற்கிருதத்தில் பயில்கின்றது.
மேல்விளக்கத்திற்கு, அடுத்து வரும் பக்கங்களைக் காண்க. அதற்கு முன், ஓரிரு எடுத்துக்காட்டுக்களையும் இங்கேயே காண்பது தெளிவுறத் துணையாக இருக்கும். (தொடரும்)
No comments:
Post a Comment