Sunday, June 28, 2009

தமிழர்க்கு என ஒரு தனி மரபியல் உண்டு!

தமிழர்க்கு என
ஒரு தனி மரபியல் உண்டு!

தமிழ் என்று ஓர்:-
  • இனமரபு உண்டு
  • மொழிமரபு உண்டு
  • பண்பாட்டு மரபு உண்டு
  • கலை மரபு உண்டு
  • எழுத்து மரபு உண்டு
  • இலக்கிய மரபு உண்டு
  • இலக்கண மரபு உண்டு
  • சமய மரபு உண்டு
  • ஆன்மிக நெறி உண்டு
  • அறிவு மரபு உண்டு
  • அறிவியல் மரபு உண்டு
  • நாட்டின மரபு உண்டு
  • ஆண்டு (கால) மரபு உண்டு
  • ...
என்று எத்தனையோ அருமைமிகுந்த வாழ்வியல் நிலைகள் உள்ளன. அவற்றை அவ்வத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்தான் காக்கவேண்டும்; மீட்கவேண்டும்; புதுமைப்படுத்த வேண்டும். அயல் மொழியினங்களின் மேலாளுமைக்குத் தமிழ மாந்தர் ஆட்பட்டு; அடிமைப்பட்டக் காலங்களில் பல்வேறு திரிபுகளும் கோளாறுகளும் ஏற்பட்டுவிட்டன.

இதனை, நம்முள் பலரும் சரியாக உணர்ந்திருக்கவில்லை. இந்த வரலாற்று நிலைசார்ந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு; தமிழ்மக்களுக்குத் தங்கள் சொந்த இனமரபு, மொழிமரபு, வாழ்வியல் மரபுகள் மீது தப்பெண்ணமும் தாழ்வெண்ணமும் உருவாகும்படியாகச் செய்துவருகிர்றார்கள்.

இதுதான் சிந்தனைத் திறவி

இதுதான் சிந்தனைத் திறவி

நெல்லிலிருந்துதான் நெல் வரும்; சொல்லிலிருந்துதான் சொல் வரும். நெல்லுக்கு நெல்தான் வித்து; அது விதைநெல். சொல்லுக்குச் சொல்தான் வித்து; அது விதைச்சொல், அதிலிருந்து வருவது வேர்ச்சொல்.

பிள்ளைக்கு மூலம் பெற்றோர்; சொல்லுக்கு மூலம் வேர்ச்சொல். ஒரே பெற்றோர்க்கு அவர்களின் உருவ்ச் சாயலில் புதுத் தோற்றங்களாகப் பல பிள்ளைகள் பிறப்பார்கள். அதே போல, ஒரே வேர்ச்சொல்லிலிருந்து; அதன் கருத்துச் சாயலில் - தொடர்பில் பல புதுச்சொற்கள் பிறக்கும்.

ஒரே பெற்றோர்க்குப் பிறந்த பல பிள்ளைகளின் முக அமைப்பில் ஓர் ஒற்றுமை தெரியும்; ஒரே வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த பல புதுச்சொற்களின் கருத்து அமைப்பிலும் ஓர் ஒற்றுமை தெரியும்.

- இர. திருச்செல்வம், சொல் அறிவியல் 1.

Saturday, June 27, 2009

மாறாப் பூட்கை

மக்கள் என்போர் தத்தம் இயல்பாலும் சூழல்களாலும் செயல்களாலும் விருப்புவெறுப்புகளின் காரணமாக வேறுபடும் பல்வேறு மனநிலையினராய் உள்ளனர். அவர்கள் ஒரு நேரத்தில் காட்டும் ஊக்கம் மற்றொரு நேரத்தில் மாறக்கூடும் - மறையக்கூடும்.



ஆனால், மானவுணர்வுள்ளவர்கள் தாம் சொன்ன சொல்லின் வண்ணமே செயல்பட்டவாறு இருந்துவருவர். வளமையும் வறுமையும் அவர்களின் உள்ளுறுதியை மாற்றுவதில்லை - மறக்கடிப்பதுமில்லை. உலகியல் நிலைகளில் எவ்வகைக் கெடுதல்கள் வந்தாலும் அஞ்சிப் பின்வாங்காதவர்கள் அவர்களே ஆவர். கெட்டாலும் மேன்மக்கள் இத்தகைய பேர்களேயன்றிப் பிறரல்லர்.



தம் தாய்நாட்டைக் காப்பதற்காக அறத்தோடு நின்று தொடுக்கும் அறப்போரில், எத்தனையோ பேர்கள் இருப்பர். அவர்களிலும்கூட, படையை எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு ஏற்றவாறு தாங்கி நடத்துவது என்பது எல்லாராலும் இயலக்கூடியதன்று. அந்தப் பொறுப்பு எதையும் தாங்கவல்ல பெருவீரரையே சாரும்.



அதுபோல, குடிசெய்யும் பொறுப்பு அதைத் தாங்கும் நிலையில் உறுதி மாறாத உள்ளம் உடையவர்களையே சாருமென்றார் நம் பேராசான். தமிழினத்திற்கு அத்தகையோரை அவர் எதிபார்த்துள்ளார்; அவர்களுக்காகவே இந்த இனநலப் பட்டயத்தை எழுதிச்சென்றுள்ளார்.
அந்த மரபியல் நிலைப்பாட்டுப் பட்டயம் இதுதான்.



அமரகத்து வன்கண்ணர் போல, தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள் ௧0௨௭



அதன்படி, தமிழைத் தற்காத்துப் பேணும் பொறுப்பாற்றும் எல்லோரையும் பணிந்து போற்றுகினறேநன். ஏனையோரும் வருகென வரவேற்கின்றேன்.


- இர. திருச்செல்வம், சொல் அறிவியல் 1 .

Friday, June 26, 2009

கொள்கை

குமரித்தொல் தமிழாய்ந்தோர்
கொள்கையைநான் ஆய்ந்தேன்காண்

குமரித்தொல் தமிழ்கொள்ளார்
கூற்றொடும்நான் கூர்ந்தேன்காண்

குமரித்தொல் தமிழ்க்கொள்கை
உண்மையெனக் கண்டேன்நான்

குமரித்தொல் தமிழ்க்கழுது
குருதியெலாம் கொதித்ததுகாண்

குமரித்தொல் தமிழ்கூறு
நல்லுலகம் புகுந்தேன்நான்

குமரித்தொல் தமிழ்ஞானக்
கோயிலாளைத் தொழுதேன்நான்

குமரித்தொல் தமிழ்க்குழைக்கும்
கொள்கையில்வேர் பிடித்தேதென்

குமரித்தொல் தமிழ்க்கேயென்
உயிர்வாழ்க்கை வைத்தேனே!

Thursday, June 11, 2009

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

உலகுக்கு ஒரு ஒளிஞாயிறு; ஒண்டமிழ் உலகுக்கு ஒரு மொழிஞாயிறு. பாவாணர் என்றொருவர் பிறந்திராவிட்டால் தமிழ் என்ற ஒன்று தன்னிலை இழந்து அழிந்துபட்டிருக்கும்.

ஆன்ம விளக்கம்

ஆன்மா என்பது என்றுமுள்ள நித்தியப் பொருள். ஆன்மாவுக்கு உடனாகவும் வேறாகவும் ஒன்றாகவும் இறை என்னும் அருட்பொருள் அதனோடு பிரியாது இயைந்து இருக்கிறது.

ஆன்மாவினிடத்து குறைநிலையும் அந்த அருட்பொருளினிடத்து குறைவில்லா நிறைநிலையும் விளங்கிநிற்கிறது. பதி-பசு-பாசம் அல்லது இறை-உயிர்-தளை என முப்பொருளாக முயங்கிக் கிடக்கும் அந்த முழுப்பொருளைப் பொருளுணர்ந்து முழுமைபெறுதல் என்பதே இறைமுறைத் திருப்பயணம். அது பிறவிப் பெருங்கடல் நீந்துதல் - இறவாப் பெருவாழ்வு பெறுதல் - நீடுவாழ்தல் - கூற்றுதைத்தல் - கூற்றம் குதித்தல் எனப்படுகிறது.