Monday, July 6, 2009

தலைமைத் தமிழியல் நோக்கு

தமிழியல் ஆய்வுக் களம் அமைக்கப்பெற்றதன் அடிப்பபடையான நோக்கும் போக்கும் குறித்து ஈண்டு சிறிது எடுத்துரைப்பது நலம் எனக் கருதி இவை உரைக்கப்பெறுகின்றன.


முதலில், நாம் தமிழர். தமிழ் என்னும் பெயரியல்வழி உலக வாழ்க்கையில், நம்மை, நம் பிறப்பை, பிறப்பின் இருப்பை, இருப்பிற்கு வாழையடி வாழையென ஈட்டிவரும் சிறப்பை, எந்த நிலையிலுள்ள தமிழருக்கும் மிகப் பொதுவாக, சரிநிகர் சமமான ஓரொத்த வாழ்வியல் மதிப்பில் வைத்திருப்பது தமிழ்மொழி.

தமிழர் காலந்தோறும் தாம் எதிர்கொண்ட அயலவர் வழிசார்ந்த உறவுநிலை மற்றும் பகைமை நிலைகளால் தம்மை யாதானும் ஒரு நம்பிக்கைமுறை அல்லது சமயம் அல்லது மதம் அல்லது இவை எதுவுமே இல்லாத நிலையில் சார்புப்படுத்திக்கொள்வது அவர்களின் உரிமை எனக் கூறும்போது, அவர்கள் வேறுபட்ட பல நிலையில் உள்ளவர்களாவர்.

தமிழர் தம்மை முற்றும் முழுதும் தமிழராகவே நினைப்பதும் இயங்குவதும் ஒரு நிலை. தம்மை யாதானும் ஒரு நம்பிக்கைமுறை வழியே அடையாளப் படுத்திக் கொள்ளும் தன்மையோடு தமிழரென்ற நினைவையும் உடன் கொண்டவர்களாகச் சிந்திப்பதும் செயல்படுவதும் வேறொரு நிலை.

தமிழ்மொழி வெறும் மொழி மட்டுமன்று; கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டுமன்று; அஃது தமிழர் என்னும் இயல்புத் தன்மைக்கு, இனத் தன்மைக்கு உயிர்ப்பு நல்கிவரும் உயிரூற்று. தமிழை மொழியாக மட்டுமே பார்த்தவர்களும், அதன்பால் எந்தக் காலத்திலும் அன்புகொள்ள மாட்டார்கள். அதனை ஒரு புறப்பொருள் அல்லது உணர்ச்சியற்ற சடப்பொருள் போலத்தான் கூறுவர்; குறிப்பர்; அறுதியிடுவர்.

ஆனால், தமிழ் என்பதை உள்ளம் - உணர்வு - பண்பு - அறிவு - ஆளுமை -திறன் - உறவு - வாழ்க்கைநெறி என்று சிந்திப்பவர்கள் எல்லாவற்றையும் தமிழினிடத்திலேயே தேடிக்கொள்வர்;  அப்படித் தேடிக் கொண்டவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காப்பர்; காப்பவற்றுக்கு மேல்வளர்ச்சி மேம்படுத்தங்களைக் கொணர்வர். எக்காரணத்தைக் கொண்டும் அதன் கட்டமைப்பைக் குலைந்துபோக ஒருநாளும் யாருக்கும் இடம் தர மாட்டார்கள்.

ஒட்டுமொத்தமாக மேற்சொன்ன அனைத்தையும் தமிழியல் மரபு என்னும் கட்டுக்காவலுக்குள் வைத்துக் கண்போல - பொன்போல - உடல்போல - உயிர்போல பாதுகாப்பர்; இறைபோல மதிப்பர்; துதிப்பர்; கதிப்பர். பொங்குதமிழ்க்கும் தமிழர்க்கும் இன்னல் விளைத்தால்,சங்காரம் நிசமென்று சங்கமுழக்கம் முழங்கித் தமிழ்ப்பகைவர்தம் [உட்பகை-வெளிப்பகை] அறிவுத் திமிர்ப்பை உருக்கிக் கருக்கிவிடுவர்.


தமிழைத் தமிழாக அதற்கேயுரிய மாற்றருஞ் சிறப்பின் மரபியல்புப்படிப் புரிந்துகொள்வதுதான் எல்லாவற்றுக்குமே மூலமான உண்மைத் தமிழ்ப் புரிதல். அவ்வாறு உள்ளத்திலும் உணர்விலும் இழைத்துணர்ந்து பெறப் படும் அதன் தூய வடிவத்தினின்றும் செயற்படுவதே தமிழாரகும் தகுதி.

தமிழால் பாரதி தகுதிபெற்றதும்; பாரதியால் தமிழ் தகுதிபெற்றதும் என இரண்டு நிலைகளைப் பாவேந்தர் பாரதிதாசனார் துல்லியமாகக் குறிப்பிடுகின்றார். அதாவது முதலில், தமிழால் தான் வளர்ச்சிபெறுதல் - தகுதி பெறுதல்; அப்படித் தகுதிபெற்ற பின்னர், தான் தன்னை ஈன்று புறந்தந்துள்ள; அறிவறிந்த உயர்நிலைக்கு ஏற்றுவித்த தமிழுக்குத் தனது மாசற்ற தகுதியால் வளஞ்சேர்த்தல் - வளர்ச்சி தருதலின் வாயிலாகத் தமிழின் தகுதி "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்" என்னும் பாங்கில் அமையபெறுவதாகும். தமிழ்செய்தல் என்று இதைத்தான் திருமூலரும் குறிக்கின்றார்.

"நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்" என்று ஒரு முழுமைநிலை பெறுவதுதான் மேற்சொன்ன தகுதிபெறுதல் என்பதன் பயனிலையாகும். வாருங்கள் தோழ்ர்களே! தோழியர்களே! தமிழால் தமிழ்செய்வோம் - தமிழ்செய்து தமிழாவோம்!



No comments: