Wednesday, July 17, 2013




புதிய வழக்காறுகள்


பினாங்கு, அரபு, பிரஞ்சு, எகுபது - எகிப்து, பஞ்சாபு, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ... போன்ற நாட்டுப் பெயர்கள் பலவும் சென்ற நூற்றாண்டுத் தமிழர்கள் தமிழ் மரபுக்கு ஏற்பத் தமிழுக்குள் வரப்படுத்தியவை.

இப் பெயர்ச்சொற்களில் இறுதியில் வரும் கு, சு, டு, து, பு, று என்பவை குற்றியலுகரம். அவற்றை முற்றியலுகரமாக ஒலிப்பது மாபெருந்தவறு. பினாங்கு – pinanggu என்பது குற்றியலுகரம்; pinangku  முற்றியலுகரம். தாய்லாந்து – Thailaanthu என்பது குற்றியலுகரம்: thailaantu என்பது முற்றியலுகரம்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்பவற்றை குற்றியலுகரம் என்று தெரியாமல் பயிற்றுவிக்கின்ற முறை தெரியாத ஆசிரியர்களின்பால் பயின்ற எவருக்கும் குற்றியலுகரம், முற்றியலுகரம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.

பின்வரும் உகர ஈற்றில் முடிகின்ற பெயர்கள் அனைத்தும் குற்றியலுகரமே. அவற்றை முற்றியலுகரமாக ஒலிக்கின்ற வழக்கநிலையை மாற்றியாக வேண்டும். முறையான தமிழ்க்கல்வி அறிவு அமையாத குறையே இதற்குக் காரணமாக இருக்கிறது.


உள்நாட்டு இடப்பெயர்கள்       அயல்நாட்டு இடப்பெயர்கள்

பினாங்கு    [பினாங்]              தாய்லேண்டு            தாய்லாந்து
கிள்ளான்    [கிளாங்]              இங்கிலேண்டு          இங்கிலாந்து
புருவாசு                         இங்கிலிசு        ஆங்கிலம்
அலோர்பொங்சு                   இங்கிலிசு        ஆங்கிலேயன்
பந்தாய் டாலாம்                   இசுபானியம்        சுவிட்சர்லாந்து
பாயான் லெப்பாசு                 இசுபானியன்      நியுசிலாந்து
கேமரன் மலை                          செக்காசுலோவோக்கியா
பிரேசர் மலை                          பிரஞ்சு     பிரஞ்சியர் பிரான்சு
கெந்திங் மலை                    இலங்கை   இந்தியா    ஆப்பிரிக்கா
பகாங்                           சவூதி அரேபியா,          பாஃதாத்து    
பெந்தோங்                       மலாயா,     பிரிட்டிசு,     போர்த்துகீசு,  
இலங்காவி                       இந்தோனேசியா          அயர்லாந்து
சிம்பாங் லீமா                          புருணை    பிலிபைன்சு  பின்லாந்து

பந்தாய் என்பதுகூட ஒலிபிசகாமல் எழுதுவதானால் ‘பந்த்தாய்’ என்று எழுதினால்தான் மலாயிலுள்ளவாறு கிடைக்கும். சுங்ஙாய் (Sungai) என்பதை எழுத்து இருந்துங்கூட சுங்கை என்று எழுதுகிறோம். இதுபோல, எழுதிடக் காரணம் என்ன? இதனை யாரும் குறைசுட்டுகிறோமா? இல்லையே, ஏன்?

நமது மொழியில் நாம்தான் எழுதுகிறோம், படிக்கிறோம். பிறருக்கு நம் மொழியும் எழுத்தும் தேவையே இல்லை. அப்படியென்றால், இல்லாத குறும்புத்தனங்கள் செய்கின்ற பேர்களெல்லாம் யாரெனக் கேட்டால், அவர்கள் நம்மிடையே நம்மைப் போலவே உருவத் தோற்றம் கொண்டிருக்கும் பொல்லாப்புத் தமிழர்களேயன்றி வேறு யாருமல்லர்.

இங்கு வந்து குடியமர்ந்த முதல் தலைமுறைக்குத் தமிழ்மொழியின் ஒலியமைப்பு நன்கு கைவரப்பெற்ற ஒன்றாக இருந்துள்ளது. அதற்கு அடுத்து உண்டான தலைமுறைகள் மெல்லெனத் தம் மூதாதை மொழியின் ஒலிமரபியல்பு அறிவும் தெளிவும் தன்னம்பிக்கையும் தேய்ந்துவரத் தொடங்கிவிட்டனர்.

பிறமொழியாளர்தம் ஆளுமைக்கு அடங்கியிருக்க நேர்ந்துவிட்ட நிலையில், அவர்கள் அப் பிறமொழியாளர்தம் வழிசார்ந்த வாழ்வினராகவும் வழக்கத்தினராகவும் தம்மையும்அறியாமல் மாறிவருகின்றனர். இன்றோ தமிழர் என்போருள் பாதிக்குப் பாதி மொழியறிவு அறவே இல்லாதவர்களால் நிரம்பியிருக்கிறது.

இனி, ‘F’ என்ற ஒலிகொண்டு முதலிலும், நடுவிலும் கடைசியிலும் அமைந்திருக்கின்ற அயல்பெயர்களை ‘ப’கரத்தைக் கொண்டு எழுதுவதற்கு ஒரு ஞாயம் மற்றவற்றிற்கு வேறொரு ஞாயமா? ‘Finland’, ‘France’, ‘Philipine’, ‘Africa’ ... என்பவற்றை எழுதுவற்குக் கொண்டுள்ள ஞாயம் என்னவோ, அதே ஞாயத்தைத்தான் மற்றவற்றுக்கும் கொள்ளவேண்டும்.

கேடுகெட்ட தமிழ்நாட்டில், நாட்டுக்கு விடுதலை வந்தாலுங்கூட, மொழிக்கு இன்னமும் விடுதலை வரவில்லை. இன்னமும் ஆங்கிலத்தில் வெள்ளைக்காரன் பிழையாக எழுதியவாறே ஊர்ப்பெயர்களைப் பொறுப்பில்லாமல் திருவல்லிக்கேணி - Triplicane, திருநெல்வேலி - Tinnelveli, தஞ்சாவூர் - Tanjore என்று எழுதுகின்றனர். ஏனெனில், அவர்களுக்குத் தமிழர் என்னும் உணர்வில் பெருமிதம் இல்லை, மாறாக ஆங்கிலம் படித்தவர் என்பதில்தான் பெருமை இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பதனால் இப்படி நடந்துகொள்கின்றனர்.

அதே மனப்பான்மையில்தான் இங்கும் நம்மில் பலரும் இருக்கின்றனர். அப்புறம் எப்படித் தமிழைப்பற்றிக் கவலை வரமுடியும்? கவலை வராதவர்கள் தமிழுக்குச் செய்கின்ற பழுதுகளைக் கொஞ்சநஞ்சம் தமிழ் அறிவுள்ளவர்களும் அன்புள்ளவர்களும் அக்கறையுள்ளவர்களும் தொழுதுபோற்றிக் கொண்டிருக்க வேண்டுமா?

மலாயரோ, சீனரோ, ஆங்கிலேயரோ, அரபியரோ நம்மிடத்தில் தம் சொல்லுக்காக மல்லுக்கு நிற்கவில்லை, எல்லாம் நம் உறவல்லா உறவுகளே என்பதைக் கவனித்து உணர்ந்தால், உண்மை தானாகப் புரிந்துவிடும். இவர்களுக்கெல்லாம் தம் சொந்த தாய்மொழியின் பெயரைத் ‘தமிழ்’ என்று திருத்தமாக ஒலிக்கத் தெரியாதது பற்றிக் கொஞ்சங்கூடக் கவலையில்லை, ஆனால், பிறர்பிறர்தம் மொழிகளின் இலக்கணம் வழுவாத உச்சரிப்புக் காவலுக்குக் குறைச்சலில்லை.

“Zainal, Zakaria, Zamri, Zahara, Zulaika” என்னும் அரபுப் பெயரை ‘ஜைனால், ஜாகாரியா, ஜம்ரி, ஜாஹாரா, சுலாய்க்கா’ என்றுதான் எழுதுகின்றனர். ஆனால், நியூசிலாந்து, மொசாம்பிக் என்பவற்றை நியூஜிலாந்து, மொஜாம்பிக் என்று எழுதாமைக்குக் காரணம் என்ன? முதன்மையாகப் பார்க்கப்பட வேண்டியது ஒலி நெருக்கமேயன்றி, எழுத்துக்கு எழுத்து நேரடிப் பெயர்ப்பன்று.

இப்படித்தான், ஒரு மூத்த ஆசிரியப் பெருந்தகை தமக்கு மிக்க மொழியறிவு இருப்பதாக நினைத்துக்கொண்டு; “ ‘Russia’ என்பதை ‘ரட்யா’ என்று தானே எழுத வேண்டும். அதை ஏன் இரசியா, உருசியா, உருசியம் என்று எழுதுகின்றீர்கள் ” என்று கேட்டார். என்னே அவருடைய அறிவு இருந்த வகை?

நெருங்கிய ஒலிப்பெயர்ப்பு என்பதன் வகையறியாமல், சும்மா இப்படி உளறுவது அவர் போன்றவர்களுக்கு வாடிக்கை – பொறுப்பறியாத பொல்லாங்குடைய வேடிக்கை. மனத்தில் தன்னினைவு கெட்டுப்போய் அயல்மொழி மப்பேறிவிட்ட நிலையில், இப்படித்தான் ஒன்றுகிடக்க ஒன்றுபேசுவர். இந்தக் குடிகாரப் பேச்செல்லாம் தமிழியம் விடிந்தால் தானாகப் இருந்த இடந்தெரியாமல் போய்விடும் என்க.

ஆங்கிலமொழிச் சாயலில் கேள்வி கேட்கின்ற இவர் போன்றவர்கள் சீனா என்பதைச் சைனா என்றல்லவா எழுத வேண்டும்? சைனா என்று எழுதுவதாக இருந்தால், அப்புறம் சீனர் – சீனன் - சீனத்தி என்று எழுதலாமோ? முடியாதே! சைனர் – சைனன் - சைனத்தி – சைனீசு என்றல்லவா எழுத வேண்டும். மலாய் என்பதைக்கூட மெலாயு என்றுதானே தானே எழுத வேண்டும்.

இப்படிக் குருட்டுத்தனமாக எண்ணுவதும் பேசுவதுமே நம்மில் பலருக்கு ஒரு நோயாகவே வளர்ந்துகொண்டிருக்கின்றது. மல்லாந்து மார்மேல் துப்பிக்கொள்ளும் போட்டியில் மிகக் கடுமையாக பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும்! இதுதான் மாற்றானைப் பொன்னாங்கட்டியாக நினைத்துக்கொண்டு; அவனிடம்போய்த் தனக்குத் தானே விலைதேடும் போக்கற்ற மண்ணாங்கட்டித்தனம்.

கிரந்தத்தில், ‘f, x, z,...’ போன்ற ஒலிகள் இல்லையே என்று அவற்றுக்கான மாற்று எழுத்துகளை உண்டாக்கிக்கொண்டார்களா, இல்லை எழுத்துக்கடன் வாங்கிக் கொண்டார்களா? எந்த மொழிக்காரனும் அப்படிச் செய்யவில்லையே? அது ஏன் என்று சிந்திக்க வேண்டாமா?

இந்தியா என்பது என்ன தமிழர் வைத்த பெயரா? ஆங்கிலேயன் வைத்த பெயரல்லவா அது? அவன் ‘India’ அதாவது ‘இண்டியா’ என்று தானே சொன்னான். அதை எப்படி ‘இந்தியா’ என்று சொல்லலாம். அதன்படிப் பார்த்தால் இந்தோனேசியா – இண்டோனேசியா என்றும், இந்தோசீனா – இண்டோசீனா என்றும், ... அல்லவா கூறப்பட வேண்டும்! இந்தியா என்பதையே ஈந்தியா என்றும், ஈண்டியா என்றும் கூறுகின்ற படித்த மாந்தரையும் பார்க்கத்தானே செய்கிறோம்.

     இத்தாலி என்பது சரியா, இல்லை இட்டாலி என்பது சரியா? புருணை சரியா, புருணாய் சரியா? சிங்கப்பூர் என்பது சரியா, சிங்காப்போர் அல்லது சிங்காப்பூரா அல்லது சிங்ஙாப்பூரா என்பது சரியா? பிலிபைன்சு சரியா, பிலிப்பினா சரியா? பர்மா சரியா, புர்மா சரியா? அல்லது மியன்மார் சரியா, மியான்மார் சரியா? நியூயார்க்கு என்பது சரியா, இல்லை நியூயோர்க்கு என்பது சரியா?

      பிற மொழி எழுத்துகளைக் கடன்பெறத் தேவையில்லாத சொந்த எழுத்தில் எழுதப்படும் இவற்றிலேயே ஓரொத்த கருத்தில்லையே! பின்னர் என்ன பேச்சு? எல்லாம் போகட்டும் மலேசியா என்பது சரியா, இல்லை மெலேசியா என்பது சரியா? இல்லை மெலேஷியா என்பது சரியா? இல்லை மெலேஷ்யா என்பது சரியா? மலாக்கா என்பது சரியா, இல்லை மெலாக்கா என்பது சரியா? கோலக் கிள்ளான் என்பது சரியா, இல்லை குவாலா கிள்ளான் என்பது சரியா? சுங்கை பெசி சரியா? இல்லை, சுங்கை பீசி என்பது சரியா? அதிலும் சுங்கை சரியா, இல்லை சுங்ஙாய் சரியா? சங்காட் என்பது சரியா, இல்லை செங்காட் என்பது சரியா?

      இப்போதைய மலாய் மயமாகி வருகின்ற தலைமுறையைச் சேர்ந்த கற்றோர் மலாய் வழக்கினைச் சார்ந்து, சப்பான் (ஜப்பான்) என்பதை ஜெப்பூன் (JEPUN) என்று உச்சரித்து வருகின்றனர்.  இவர்களுக்குச் சொந்த அறிவே கிடையாதா?


No comments: