Wednesday, July 17, 2013






ஒரு விரிந்த நெடும்பார்வை
ஒரு திரண்ட பெருநோக்கு
ஒரு முடிந்த முடிபு



எல்லாத் துறைகளிலும் தமிழர்தம் கருத்தே தலைமைக் கருத்தாக மேம்பட்டு விளங்கியபோது, எல்லாம் தமிழிலிருந்து பிறமொழியாளர்களிடத்துச் சென்றுள்ளன. ஆனால், தமிழர்தம் நிலைமை தாழ்வுகண்டு; தலைமைத்திறம் குன்றிக் கூனிக் குறுகி விட்ட வீழ்ச்சி நிலையில், பிறரது கருத்துகள் பிறமொழியாளரிடத்திலிருந்து தமிழுக்குள் புகலாயின – புக நேர்ந்தது. அதனால், பிறமொழியினர்தம் போக்கில், தமிழுக்குள் வலிந்து; தெரிந்தே மரபு மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது மீண்டும் மீண்டும் எண்ணித் தெளிவு பெற்றாக வேண்டிய அடிப்படைக் கருத்து.

துறைதோறும் துறைதோறும் அறிவுத் தலைமையும் ஆக்கத் திறமையும் தமிழர் வசமாக இருந்த வரைக்கும், எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர்வைக்கப்பட்டுள்ளது. ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக அயலாரிடத்திலிருந்து வரப்பெற்றவற்றுக்கும் அவற்றுக்குரிய ஆக்கக் காரணத்தை அறிந்து அதற்குத் தகப் பெயர்வைக்கப்பட்டுள்ளது. அப்படியும் பொருந்திவராதவிடத்து; பொருத்தமறிந்து பெயர்வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்தம் மொழிநெறியாக இருந்து வந்துள்ளது. இந்த மொழியில் இன்று நமக்கு தாழ்ச்சிநிலையும் வீழ்ச்சிநிலையும் ஒருங்கே ஏற்பட்டுள்ளன.

தமிழர்தம் அகத்தலைமையும் புறத்தலைமையும் மீண்டும் ஒருங்கே புத்துயிர்ப் பெற்று எழுந்தாக வேண்டும் என்பதே நமக்குள்ள உண்மையான தேவைநிலை –மானநிலை – மாண்பார்ந்த மதிப்புநிலை. அதற்கு அயல்மொழியினப் போக்குளைச் சார்ந்து போகும் போக்குகள் நமக்கு உதவமாட்டா. தன்னை யார் என்று தன் வழிவழி வந்த தடத்தினைப் பற்றி அறிய வல்ல அறிவுத்திறம் பெற்றவர்களுக்கு மட்டுமே அது முடியும்; மற்றவர்களுக்கு முடியாது.

தமிழ்ஞானப் பரம்பரை எனப்படும் தமிழ்த்திருக்கூட்ட மரபு வழியாக இயங்குகின்ற ஒட்டுமொத்த வாழ்வியல் மீட்சி என்பது நடக்காத வரைக்கும் இந்த இழுபறிநிலை இருக்கவே செய்யும். இதை எப்படி எழுதுவது, அதை எப்படிச் சொல்லுவது என்று அயல்வழி நின்று கேள்வி கேட்பதெல்லாம் உண்மைத் தமிழ்வழி நிற்கின்றவர்க்கு இல்லை.

இதனை உணராமல், ஆரியம், பிராகிருதம் (சமணம்), பாலி (பவுத்தம்), அரபியம், ஐரோப்பியம், ... போன்றவற்றின் பின்னே சென்றுவிட்ட போக்குகளை வைத்துப் பேசுபவர்கள் யாருமே கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா, உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா, விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா, இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே” என்னும் சிவவாக்கியக் கருத்துக்கொப்பான நிலைமையினையே அடைந்தவர்களாவர்.

அவர்களிடத்தில் ‘முழுமைத்தமிழ் வீச்சு’ இருப்பதில்லை, இருக்கமுடியாது. ஏதோ ஒருவாறு தாம் சார்ந்துகொண்ட புதிய அயற்சார்புகளுக்கு இசைந்தநிலையில், ‘சார்புத் தமிழ்ப் போக்கு’ என்ற வடிவினவாக அவை இருக்கலாகுமே அன்றி, முற்றும் முழுதாகத் தமிழாக மட்டுமே இருக்கமாட்டா - இயங்கமாட்டா. இதுதான் உண்மைநிலை.

[ காண்க: கிரந்தம் போதாதென்று, அரபித் தமிழ் (Arabic Tamil) என ஒரு முயற்சியும், உரோமைத் தமிழ் (Romanized Tamil) என மற்றொரு முயற்சியும் தோற்றம் பெற்றிருப்பது பற்றி எண்ணிப்பார்த்தால், இவ்வுண்மை ஒருவாறு புரியும். இவை ஒருசாராரின் தேவை காரணமாகத் தோன்றியுள்ளன எனக் கூறும் அதே வேளையில், இவை முன்னைத் தமிழின் இலக்கணக் கட்டமைப்புக்கு முரண்பட்டு; அதன் இயல்புநிலை தகர்ந்துவிடத்தக்க ஓர் அழுத்தநிலையினையும் உடன்தோற்றி நிற்கின்றன என்பதையும் சமன்செய்து சீர்தூக்க வேண்டும். சீர்தூக்கினால், எதன் வழியில் எது செல்ல வேண்டும் என்னும் ஞாயமும் உடன்கிடைக்கும்.

யாவரே ஆயினும், தமிழ்வழி சார்ந்து எழுதியும் பேசியும் வந்துள்ள அவரவர்தம் முந்தையர் வழிமுறையிற் செல்ல எண்ணங்கொண்டுவிட்டால், எந்த அயல்நெறியும் தமிழுக்குப் பண்டுபோல அரண்செய்ய முடியும். இல்லையேல், தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு முரண்செய்வதிலிருந்து அவை தம்மைத் தவிர்த்துக்கொள்ள முடியாது – வாய்ப்பு எதுவும் தெரியவில்லை. ]

எனவே, இயற்கைச் செம்மொழி ஆகிய தமிழ்மொழியும், அத் தமிழ்மொழி தனக்கேயுரிய ஒன்றாகக் காலந்தோறும் கொண்டுவந்துள்ள உயிர்ப்பொதுமை, உலகப் பொதுமை என்பவற்றுக்கு மாறுபாடில்லாத ‘இயற்கைச் செந்நெறி’ எனத் தன்னகத்தே கொண்டுள்ள அதன் தனித்தன்மையான மரபியலை, கால வகைக்கேற்ப இயல்பார்ந்த வாழ்முதலாக ஏற்றுக்கொண்டு; அதனைக் காத்துப்பேணி வாழ்கின்ற முழுமையான தேவைநிலை என்பது எல்லோர்க்கும் ஒன்றாக – ஒருபடித்தாக இல்லை இதனால் தெளிவாகிறது அல்லவா?.

வரவர அயற்சார்பு கொண்டோர் அதிலிருந்து விலகிச் சரிந்தவண்ணமாக இருக்கின்றனரே அன்றி, அவர்களால் தமக்கும் முன்னர் வாழ்ந்திருந்த தலைமுறையினர்தம் அளவுக்குக்கூட தமிழாக - தமிழராக இருக்க முடிவதில்லை – முடியவில்லை. ஆகையால், ‘முழுமையான தமிழ்த்தேவைநிலை’ என்பது யார்க்கு இருக்குமோ, அவர்களுக்கே முன்னுரிமையும் முதன்மையும் தரப்பட்டாக வேண்டும். அவர்களின் வழியிற் பிறர் குறுக்கிடுதல் கூடாது – அஃது அறமன்று.

ஒன்றால் கம்பர், சேக்கிழார் நிலையில் ஒன்றுபட்டால், எந்த அயல்சார்பும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதைத் தம்மை மரபார்ந்த தமிழ்ப்பிறப்பாக உணர்கின்ற எல்லோருமே உளமார உணர்ந்தாகல் வேண்டும்; உணர்ந்தவண்ணமே அவர்களின் சுவட்டில் நடந்தாகல் வேண்டும்.

இல்லையென்றால், இருக்கின்ற நிலைவரப்படிப் பார்த்தால், தமிழர் என்போர் மேலும் மேலும் வேறுபட்டுப் பிளவுறுவது என்பது தவிர்க்க முடியாததாக நடந்தே தீரும். இந்த முரண்டுகளைக் கண்டுதான், பாவேந்தர் திட்டவட்டமாகத் தம் தமிழியக்கத்தில், “சமயமெனும் சூளையிலலே தமிழ்நட்டால் முளையாது” என்று தீர்பாகச் சொன்னார். தமிழ் தமிழாத்த் தன் இயல்பில் நிலைபெற்றால் அன்றி, அது உலகத்தில் இயங்குவதற்கு இடையூறு பலவும் பெறும்.

அதற்கு தன்னிலையில் இருந்து சிதறவைக்கும் ஓர் அழுத்தம் புற மொழிகளிலிருந்தும் புற நெறிகளிலிருந்தும் தொடர்ந்திடும் நிலையில், அது திரிபு படுவதும் மற்றொரு அல்லது வேறு மொழியாக மாறுதல் என்பதிலிருந்து தவிர்த்துக் கொள்வது என்பது இயலாது. இதனை நன்கு உணர்ந்துகொண்ட நிலையில்தான் பாவேந்தர் நமக்கு நெறி காட்டுகின்றார். இதோ அந்த முழுப்பாடல்,


சமயமெனும் சூளையிலே
தமிழ்நட்டால் முளையாதென்(று)
           அறிந்தி ருந்தும்

சமயநூல் அல்லாது
வழியறியாத் தமிழ்ப்புலவர்
           சமயம் பேசித்

தமிழ்அழிப்பார் எனினும்அவர்
தமிழ்வளர்ப்போம் என்றுரைத்துத்
           தமைவி யப்பார்

தமிழ்வளர்ச்சி தடைபட்டால்
     தம்வளர்ச்சி உண்டென்றும்
          நினைப்பார் சில்லோர்!
-          தமிழியக்கம் 97


தனித்தனிச் சமய வழக்குகளை அவ்வச் சமயத்து மொழிவழியில் நேரே கொள்வது நன்று. தமிழில் அதனைச் சொல்லவும் எழுதவும் தேவையாகும்போது; தமிழைப் பின்தள்ளிப் புறக்கணிப்பது மாபெரிய வழுவாகுமேயன்றி, வலுவாகாது.

தமிழை முழுமுதலாகக் கொண்ட தேவநேயம்வழி நடப்பது எல்லா நிலையினரையும் இணைக்கும். தமிழின் தனித்தன்மையினைக் கட்டிக்காத்துக் காலப் புதுமைகளோடு கைகோத்து; அதன் தொன்மைகெடாமல் தொடர்ச்சிகாண செவ்விய வழிவகுக்கும்.

அண்மையில், தமிழகத்தில் முற்றுமாக நல்ல தூய தமிழில் விவிலியம் (பைபிள்) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேற்சொன்னபடித் தம்மைத் தமிழராக நினைத்து; நிலைநின்ற உணர்வோடு தாம் விரும்பித் தழுவிக்கொண்ட வாழ்க்கை நெறியினையும் ஒருங்கே இசைவித்துக்கொண்ட தமிழ் மொழியுணர்வுக்கும் இலக்கண மரபுணர்வுக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. அதற்கேற்ப, தமிழ்மொழியை நன்கு முறைபடக் கற்றுத் தெளிந்தவர்கள், தம் கிறித்துவநெறி சார்ந்த பெயர்களைக்கூட தமிழாக்கம் செய்துவைத்துக்கொண்டுவருகின்றனர். இஃது ஒரு பாராட்டத்தக்க மாற்றம்; ஏனைய சமயஞ்சார்ந்த தமிழர்களும் எண்ணிப்பார்த்துப் பின்பற்றத்தக்க மாற்றம்.

இவ்வாறே எல்லா நெறியினரும் மெல்ல முயன்றுவரத் தொடங்குவார்களானால், மீண்டும் படிப்படியாகத் தமிழ்மொழி தன் இயல்புநிலைக்குத் திரும்பிவரும். சங்க காலத்தில் இருந்தது போல, சமகாலத்திலும் மதங்கடந்த நிலையில், ‘சமயப்பொறை’ எனும் சமயப் புரிந்துணர்வோடு மீண்டும் தமிழ்மக்கள் இனவலிமையும் மனவலிமையும் ஒருங்கே பெறுவர். சமயத்தால் வேறுபட்டாலும், தாய்மொழியால் எல்லாரும் ஒருநிகரானவர்களாக ‘மூலத்தமிழ் இனமரபு’ உணர்வும் உறவும் பழுதுபடாமல் பண்டுபோல் இன்றும் மற்றொரு சங்ககாலத்தை உண்டாக்கவும் கூடும்.

அதற்குத் தொல்காப்பிய பெருமானாரும் திருவள்ளுவப் பெருமானாரும் ஆன்மப் பொதுமையறத்தினைக் கொண்டு; தலைமைதாங்கி; தகைமைதந்து திறப்படுத்தி நம் மொழிமரபு உயிர்நாடி அறுபட்டுவிடாமல் நெறிப்படுத்தி வழிநடத்துவதுதான் முதன்மை படுத்தப்பட வேண்டும். இற்றை நாளில் மீண்டும் அந்த உண்மையினை கண்டுணர்ந்து கொண்டு பொதுப்பட அறிவித்திருப்பவர் அருட்பேரொளி வள்ளற்பெருமானார் என்பதில் இரண்டு கருத்தில்லை.

அவர்தான், தமிழ்மொழிக்கு மெய்யியல் விளக்கம் அளிக்கும்போது, ‘ழ’கரத்தை இயற்கையுண்மைச் சிறப்பியல் அக்கரம் என்றும், தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்பவே, எல்லார்க்கும் பொதுவான இறைவனையும் இயற்கையுண்மை, இயற்கைவிளக்கம், இயற்கையின்பம் என்றும் ஓரொத்த இயைபினவாக இவை அத்தனையையும் உள்ளிட்டு உரைத்திருக்கின்றார்.

இறைபற்றிய செம்முடிபாக நாவலந் தேயத்திலே (பரத கண்டத்திலே) கண்டுகொள்ளப்பட்டுள்ள ஆறு பெரிய தலைமைசான்ற முடிபுகளைக் கடந்து மேற்சென்று அவற்றையும் உள்ளிட்டவண்ணமாக இயற்கைமுடிபு என்று மீண்டும் பொதுமையாக நிலைசெய்து கொடுத்திருக்கின்றார்.

இந்தப் ‘பொதுமைத் தமிழ்ப்பெருநெறி’ அதன் இயற்கைத்திறம் வழாது மீண்டும்மீண்டும் காலந்தோறும் அதற்குத் தகத் தன்னை வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதனைக் கண்ணுடையர் காண்பர்-கண்டடைவர். அஃது எழுத்து – சொல் - பொருள் எனவும், அறம்பொருள்இன்பம்வீடு எனவும் தமிழோடு இரண்டறக் கலந்து இயைந்து இருக்கின்றது.

அதில் கைவைக்கத் துணிந்தவர்கள், அதன் கட்டுக்கோப்பைச் சிதைக்கும் வண்ணமாகச் செயல்படுத்தும் எந்தக் கருத்தும் கருமமும் மரபார்ந்த தமிழர்களின் உயிர்ப்பியக்கத்துக்கு ஊறுசெய்வதாக இருந்தது - இருக்கின்றது – இருக்கும்.

எனவே, இந்த மூலப்பெரு நெறியினைப் பொதுமையறம் பிறங்கும்வண்ணமாகக் கடைப்பிடிப்பவர்களுக்குத்தான், கடைப்பிடிக்கும் தமிழர்களுக்கு மட்டுந்தான், தமிழின் மரபார்ந்த தூய்மையும் செம்மையும் எல்லா நிலையிலுமே தவிர்க்கொணாத – இருந்தேயாகவேண்டிய - இன்றியமையாத தேவையாக இருக்கின்றது என்பது விளக்கமாகிறது.

எப்படி பிறர்பிறர்க்கெல்லாம் அவரவர் சார்ந்துநிற்கும் வாழ்வியல் வடிவங்கள் எத்தகு முகாமையும் முதன்மையும் உடையவையோ, அப்படித்தான் மேற்சொன்ன ‘தமிழ்மரபியல்’ என்பது மரபுசார்ந்த தமிழர்க்கு முகாமையும் முதன்மையும் உடையவை என்பதை இயல்பாகச் சீர்தூக்கிப்பார்த்து உணரவேண்டும்.

பிறநெறி சார்ந்தவர்களுக்கெல்லாம் மாற்று மொழி ஒன்று கிடைக்கும். ஆனால், தமிழ்நெறி சார்ந்திருப்பவர்களுக்குத் தமிழ்போனால், எல்லாமே போய்விடும், மற்றொரு மாற்று அதற்கில்லை. அப்படி வரும் எதுவுமே தமிழ்மரபியலை ஓர் இம்மியளவும் காட்ட முடியாது – காட்டவே முடியாது.

எனவே, தூய மரபுநெறியைச் சார்ந்திருக்கும் தமிழர்களுக்கே மற்ற எவரையும்விடத் தமிழின் அனைத்துநிலையிலும் அதன் தூய்மையும் செம்மையும் காத்துக்கொள்ளப்பெற வேண்டிய கட்டாயம் எதைவிடவும் மிகப்பெரிதாக இருக்கிறது.

உள்ளும் புறமும் நூற்றுக்கு நூறு தமிழால் வடிவமைக்கப்பெற்ற வாழ்வியல் வடிவம் அதன் மூலமரபுகளில் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றித்திருக்கின்றது. ஒவ்வோர் எழுத்தும், சொல்லும், கருத்தும் ஒன்றால், அதன் நிலைத்தன்மையினைப் பாதுகாக்கும், அன்றால், பாதிக்கச் செய்யும். இதில், வாய்ப்புத் தெரிவுக்கு வழியில்லை - இடமில்லை. உண்டு அல்லது இல்லை என்பதுதான் அதன் விளைவாக இருக்கிறது.

அப்படிப் பாதிப்பாக வந்துப் பாழ்ப்படுத்தியிருக்கின்ற அயற்கூறுகளை அகற்றுவதற்குக் கடந்த ஒரு நூற்றாண்டாகத்தான் மீட்பியக்கம்மீட்புப் பணிகள் பன்னரும் சான்றோர் வழிசார்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அஃது மெல்லென வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றது. அதற்கென அப்படியே தம் வாழ்க்கையையே ஒப்புக்கொடுத்துப் போராடி, மூலத்தமிழின் உயிர்ப்பாக அதனோடு இரண்டறக் கலந்து கரைந்திருப்பவர்கள் எண்ணிமுடியாத பெரிய எண்ணிக்கையினர்.

இதுபற்றியெல்லாம் ஒன்றுந் தெரியாதவர்கள், தமிழ்மயமாக வாழும் வாழ்வியக்கம் இல்லாதவர்கள் என்போர்தான் உலகம் போகிற போக்கு என்று அயலார் போகின்ற போக்குகளின் பின்னால் கண்மூடித்தனமாக நொண்டியடித்துச் செல்பவர்கள் என்பதை பொறுமையாக உட்கார்ந்து ஓர்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும். தனக்கு உரிய போக்கு – வழி – பாதை – பயணம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள முடியாதவர்கள் இவர்கள். இவர்கள்தம் போக்கும் வரவும் புணர்வும் ஒட்டுமொத்தத் தமிழத்திற்கே இடையூறாகிவிடும்.

தமிழியம் யாரையும் எதுவும் செய்யவில்லை, சொல்லவில்லை. ஆனால், உலகியம் என்பதாகச் சும்மா சொல்லிக்கொள்பவர்களே துள்ளிக்கொண்டு தமிழியம் என்பதன் தனித்தன்மையினையும் தன்னுரிமையினையும் சற்றும் மதிக்காமல் மாறு சொல்கின்றனர், ஊறுசெய்கின்றனர் என்பதையும் நன்றாக வேறுபிரித்து விளங்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய போக்குகளுக்கு ஏற்பத் தமிழ்மரபியலை இழுத்து வளைத்து நெளித்துக்கொள்ளும் எண்ணம் உண்மையான தமிழ்மரபியல் வழி உயிர்த்து இயங்குகின்ற எவருக்கும் வரமாட்டாது – வரவே மாட்டாது.

அந்த உண்மைத்தமிழ் மரபுள்ளம், அடுத்தவன் பின்னே வால்பிடித்துச் செல்ல ஒருப்படாது. அவர்களின் உள்ளம் ‘ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று’ என்ற திருக்குறட் பூட்கைத்திறம் மிக்கது. அதனால்தான்,


கெஞ்சுவ(து) இல்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவ(து) இல்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவ(து) இல்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவ(து) இல்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
                                    - பெருஞ்சித்திரனார்

என்று ஒரு பெரிய போராட்டமே நடந்துகொண்டுள்ளது. இப்படி ஒரு போராட்ட நிலை, எந்தச் சார்புத் தமிழ் நிலையினர்க்கு இருக்கிறது? இல்லையே, யாருக்குமே இல்லையே! முற்றும் முழுதுமாகத் தமிழ்மயமாக இயங்குவதற்கும், தமக்கு வேண்டியாங்குப் பயன்கொள்ளுதற்கும் இடையே விரிந்துகிடக்கும் பெரிய வேறுபாடு என்ன என்பது இப்போதாவது தெரிகிறதா?



      தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
                   தமிழர்க்குத் தீங்கு செய்யும்!

          தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
                   தரும்தமிழால் தமிழர் தாழ்வர்!

          தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
                   தமிழ்நாட்டைக் கேடு சூழும்!

          தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
                   தமிழ்நாட்டுப் பகைவ ராமே!
                                    - பெருஞ்சித்திரனார்

எந்தமிழ்க்குப் பிறராலே வரும்தீங்கும்
இடர்ப்பாடும் எள்மூக்(கு) என்றால்

செந்தமிழர் எனக்கூறிச் செருக்கிடுவார்
செயுந்தீங்கு பறங்கிக் காயாம்

         வெந்தழலில் வெந்ததுவும் நீர்வந்து
விழுங்கியதும் போக எஞ்சும்

செந்தமிழ்நூல் பெருமையெல்லாம் இவர்விழுங்கிச்
          செரிக்கின்றார் இனம்கொல் வாரே!                                                                 - பெருஞ்சித்திரனார்


No comments: